MAIL OF ISLAM

Knowledge & Wisdom



உள்ளத்தை தூய்மைப்படுத்துவது எப்படி?


எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


இஸ்லாத்தின் பார்வையில் தஸ்கியதுன் நப்ஸ் எனும் (உள்ளத்தை) பரிசுத்தப்படுத்துவது, தூய்மைப்படுத்துவது எப்படி?


​​

♣ தஸ்கியதுன் நப்ஸ் என்றால் என்ன?

தஸ்கியத்துன் நப்ஸ் என்பது 'உள்ளத்தூய்மை' எனப்பொருளாகும். உள்ளத்தைத் தூய்மைப் படுத்துகின்ற ஆன்மீக பயிற்சிகளை 'தஸ்கியா' எனுஞ் சொல்லால் குறிப்பிடப்படும்.


​​இஸ்லாமிய சன்மார்க்கப் பணியில் ஈடுபடுபவர்களும் தூய மூமின்களாக வாழும் அல்லாஹ்வின் இறைநேசர்களாகிய வலிமார்கள், காமிலான ஷெகுமார்கள் தத்தமது உள்ளத்தை அவ்வப்போது தூய்மைப்படுத்திக் கொண்டே இருகிறார்கள்.


​​அதேபோன்று அவர்களிடம் பைஅத் பெற்றுள்ள (மாணவர்கள்) முரீதுகள், முஹிப்பீன்களின் உள்ளத்தையும் தூமைப்படுத்தி அல்லாஹ்வின் அன்பையும் நெருக்கத்தையும் பெற்றுக் கொடுத்து ஈருலகிலும் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகதான் அவர்கள் சதா நேரமும் ஈடுபடுகிறார்கள்.


​​

♣ தஸ்கியதுன் நப்ஸ் எனும் உள்ளத்தை தூய்மைப்படுத்துவதன் முக்கியத்துவம்

இறைத்தூதர்கள் குறிப்பாக எம்பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டதற்கான முதற்காரணம் முதன்மைக் காரணம் மக்களை தஸ்கியா செய்வதுதான் என்று திருக்குர்ஆன் விரிவுரையாளர், இமாம்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அத்தியாயம் அல்பகறாவின் 129, 151 வசனங்களுக்கு விளக்கங்களை குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் அல்லாஹ் முக்கியமான விஷயங்களை சொல்லும் போது அல் குர்ஆனில் பல ஸுராக்களில் சத்தியம் செய்வான். ஆனால் இந்த ஸுராவில் மட்டும் தஸ்கியதுன் நப்ஸ் எனும் உள்ளத்தை தூய்மைப்படுத்துதல் பற்றி சொல்தற்காக 11 சத்தியம் செய்துள்ளான்.


​​இதேபோன்று இந்தளவு அதிகமான சத்தியங்களை குர்ஆனில் வேறு எந்த இடங்களிலும் இறைவன் செய்ததில்லை. அப்படி என்றால் தஸ்கியதுன் நப்ஸ் என்பது எவ்வளவு பெரிய ஒரு முக்கியமான விஷயம் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

♦ 'திடனாக வெற்றி பெற்று விட்டான் மனதைத் (தஸ்கியா செய்து) தூய்மைப் படுத்தியவன். ஆனால் தோற்றுவிட்டான் அதை(ப் பாவத்தில்) புகுத்தி நசுக்கியவன்!' (அல்குர்ஆன் 91:9,10)

ஆகவே மக்கள், இறைத்தூதர் ஒருவரிடமிருந்து பெற்றுக்கொண்டாக வேண்டிய முக்கிய விஷயமே 'தஸ்கியா' எனும் உள்ளத்தை தூய்மைப்படுத்துதல் தான் என்று வான்மறை குர்ஆன் குறிப்பிடுகின்றது. அந்த அடிப்படையில் நபிமார்கள், ரஸூல்மார்கள் விட்டுச்சென்ற தஸ்கியதுன் நப்ஸ் எனும் ஆன்மீக வழிகாட்டல்களை இன்றைய காமிலான ஷெய்குமார்கள் தரீகத் - சூபிசம் என்ற வழியில் தன்னிடம் பைஅத் செய்துள்ள சீடர்களுக்கு (மாணவர்களுக்கு) போதிக்கின்றார்கள்.


​​

♣ தஸ்கியதுன் நப்ஸ் எனும் உள்ளத்தை தூய்மைப்படுத்துவது பற்றிய அல்லாஹ்வின் எச்சரிக்கை

உள்ளத்தை அவ்வப்போது தூய்மைப்படுத்திக் கொண்டே இருப்பதோடு ஆன்மீக வழிகாட்டிகளான காமிலான ஷெய்குமார்களிடம் (ஆன்மீக ஞானஆசிரியர்களிடம்) தஸ்கியா பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னை நாடிவரும் ஒரு மனிதரை எக்காரணம் கொண்டும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடக் கூடாது என்று வான்மறை எச்சரிக்கின்றது.

♦ “எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து, அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனுமாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.”(அல்குர்ஆன் : 2:129)

♦ இதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும், உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும், உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பதற்காகவும், இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம். (அல்குர்ஆன் : 2:151)

♦ அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார். அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா? (அல்குர்ஆன் 80:1-3)


​​

♣ தஸ்கியதுன் நப்ஸ் எனும் உள்ளத்தை தூய்மைப்படுத்துவதற்கான வழிமுறைகள்

தஸ்கியா பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கு சில நிபந்தனைகளும், வழிமுறைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

1) இறைவனைப் பற்றிய முழுமையான அறிவை ஆன்மீக ஆசிரியரிடம் தேடிப்பெற வேண்டும்.

நபி மூஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களைப் பற்றிக் கூறும்போது கூட அவர்களின் வருகைக்கான நோக்கமாக இதையே வான்மறை குர்ஆன் முன்வைக்கின்றது "பிர்அவ்னின் செல்வீராக! அவனோ வரம்பு மீறி விட்டான். தஸ்கியா அடைய வேண்டும் என்கிற எண்ணம் உனகிருக்கின்றதா? உன் இறைவனின் மீது உனக்கு அச்சம் ஏற்படும் அளவு அவனைப் பற்றி கூறட்டுமா? என்று அவனிடம் கேளும்" (அல்குர் ஆன் 79: 16,17,18,19)

இவ்வசனத்திலிருந்து மூன்று விஷயங்களை நாம் புரிந்து கொள்கின்றோம். தஸ்கியா அடைய வேண்டும் என்றால், அல்லாஹ்வைப் பற்றிய பயம் நம்மிடம் இருந்தாக வேண்டும். யார் அல்லாஹ்வுக்கு உண்மையிலேயே பயப்படுகின்றாரோ, அவர் அல்லாஹ்வுக்குப் பிடிக்காத காரியங்களை ஒருபோதும் செய்யமாட்டார். அவற்றை விட்டும் வெகுதூரம் விலகி இருப்பார், விலகி இருக்கவே முயற்சி செய்வார். தீமையை விட்டுத் தூரவிலகி இருப்பவரே தூய்மையைப் பெற்றுக் கொள்ள முடியும்! ஆதலால், தஸ்கியா அடைவதற்கான மூலகாரணமாக இறையச்சமே அதாவது தக்வாவே உள்ளது. தக்வாவைப் பெற்றவர்தாம் தஸ்கியாவை பெற்றுக்கொள்ள முடியும்.

2) இறைவனுக்கு மட்டுமே பயப்பட வேண்டும்.

அடுத்து, இந்த இறையச்சம் எப்படி ஏற்படும்? அதற்கான வழிமுறை என்ன? என்பதற்கான விடையையும் அந்த (அல்குர் ஆன் 79: 16,17,18,19) இறைவசனங்களே தந்து விடுகிறது. இறைவனைப் பற்றிய முறையான அறிவு யாரிடம் இருக்கிறதோ. அவர்தான் இறைவனுக்கு பயப்படுவார். அல்லாஹ்வைப் பற்றி ஒரளவுக்காவது தெளிவான ஞானத்தை நாம் ஆன்மீக வழிகாட்டிகளாக காமிலான ஷெய்குமார்களிடம் இருந்து பெற்றுக் கொள்வதன் மூலம் அவன் மீது நமக்கு உண்மையான பயம் ஏற்படும்.

♦ மேலும் உமது ஆடைகளை (உள்ளத்தை) தூய்மையாக வைத்துக் கொள்வீராக. (அல்குர்ஆன் 74-4)

♦ எவர்கள் மறைவில் அர்ரஹ்மானுக்கு பயந்து நடந்து (அவன்பால்) மீளக்கூடிய (பரிசுத்த)மனதுடன் வருகிறார்களோ (அவர்களுக்குச் சுவனம் நெருக்கமாக்கப்பட்டு சாந்தியுடன் நீங்கள் இதில் நுழையுங்கள். இது நிரந்தர நாளாகும்.(என்று அவர்களுக்கு கூறப்படும்) (அல்குர்ஆன் 50-33,34)

♦ (அப்போது) அவன் ”உன் மகத்துவத்தின் மீது சத்தியமாக,நிச்சயமாக அவர்கள் அனைவரையும் வழிகெடுத்து விடுவேன் என்றான்.அவர்களில் (உன்னால்) தேர்தெடுக்கப்பட்ட (இஹ்லாசுடைய) அடியார்களைத் தவிர. (அல்குர்ஆன் 39-82,83)

♦ செல்வமும், குமாரர்களும் (யாதொரு) பயனிக்காத (அந்த) நாளில் பரிசுத்த இதயத்துடன் அல்லாஹ் விடம் யார் வருகின்றாரோ அவர் தவிர (மற்றவர்களுக்கு பயனளிக்காத நாள்) (அல்குர்ஆன் 26-88,89)

​​

3) அப்பயத்தை சரியான வடிவில் அமல்களாக வெளிப்படுத்துவதன் மூலம் வெற்றி கிடைக்கும்.

ஈமான் கொண்டோரே! நீங்கள் பரிசுத்தமடைவதற்காக, உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்குக் கடமையாக்கப்பட்டதைப் போன்று உங்களுக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (அல் குர்ஆன் 2:183)

சிலர் நோன்பை வைத்துக்கொண்டு நீரிழிவு நோய் குறையும், ரத்த அழுத்தம் குறையும் என்று மருத்துவ நலன்களை கூறி மருத்துவ பாடம் நடத்துவார்கள். இன்னும் சிலர் அமலை வைத்து கணக்கு பாடம் நடத்துவார்கள். ஆனால் புத்திசாலிகள் ரமலான் மாதத்தை தங்களின் உள்ளத்தை பரிசுத்தப்படுத்தும் வேலையில் மும்முரமாக ஈடுபடுவார்கள்.

♦ உள்ளத்தை தூய்மைப்படுத்தி கொண்டவர் திட்டமாக வெற்றி அடைந்து விட்டார். (அல் குர்ஆன் 92:9)

♦ எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ,நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும். (அல்குர்ஆன் : 79:40, 41)

♦ தூய்மையடைந்தவன் (தஸ்கியா செய்தவன்), திட்டமாக வெற்றி பெறுகிறான். மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான். (அல்குர்ஆன் : 87:14,15)

இவ்வசனத்தில் இறைவனின் திருநாமங்களை நினைவு கூர்வது' என்பது தான் தஸ்கியாவின் முதல் வெளிப்பாடாகவும் அதனுடைய உண்மையான வழிமுறையாகவும் உள்ளது. இறைவனின் திருநாமங்களை - அஸ்மா உல் ஹுஸ்னா - தாம் முழுமையான அறிவிற்கு மூலமாகவும் அடிப்படையாகவும் உள்ளன.


​​இறைவனின் பண்புகள், குணங்கள் என்னென்ன என்பதை அவையே விளக்குகின்றன. அப்பண்புகளைப் பற்றியெல்லாம் தெரிந்த கொண்டால்தான் தம்முடைய அடிப்படைக் கொள்கைகள் (அகாயித) எவையெவை? என்பதை விளங்கிக் கொள்ள முடியும்! அக்கொள்கைகளின் அடிப்படையில் தாம் நமக்கும், நம்முடைய இறைவனுககும் இடையிலான தொடர்பு என்ன? என்பதைப் பற்றியும், நமக்கும், பிறஅடியார்களுக்கும் இடையிலான உரிமைகள், கடமைகள் என்னென்ன? என்பதைப் பற்றியும் புரிந்து கொள்ள முடியும்! இப்படிப்பட்ட ஆன்மீக பயிற்சிகளை தான் காமிலான ஷெய்குமார்கள் தன்னிடம் பைஅத் பெற்றுள்ள சீடர்களுக்கு போதிக்கின்றார்கள்.

அடுத்து தஸ்கியாவின் செயல் வடிவ வெளிப்பாடாக உள்ளது தொழுகை ஆகும். ஈமான் பில்லாஹ் என்பதன் முதல் வெளிப்பாடே தொழுகைதான்! ஷரீ அத்தின் துவக்கப் புள்ளியாகவும், ஷரீஅத்தைச் சூழ்ந்து வரையறையாகவும் தொழுகையாகவும் தொழுகையே உள்ளது.


​​வீடொன்றில் விளக்கை ஏற்றி வைத்தால் வெளிச்சம் நாற்புறமும் பரவும், இருளும் அகலும் அல்லவா? அது போன்றே, மனம் ஒன்று, அனைத்து வகையான தீமைகள், கோடுகளை விட்டும் விலகி தூய்மையானதாக, பரிசுத்தமானதாக ஆகிவிட்டால் அத்தூய்மை அதன் அமல்களில் எல்லாம் ஜொலிக்கும். ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர், அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். (அல்குர்ஆன் : 23:1, 2)

தஸ்கியா அடைய வேண்டும், தன் மனதைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுபவர் அக்கறையோடு ஆன்மீக வழிகாட்டிகளாக காமிலான ஷெய்குமார்களை கரம் பிடித்து அவர்களிடம் தேடல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் இறைவனைப் பற்றிய அறிவு பெருகப்பெருக இறைவனின் மீதான பயமும் அதிகரித்துக் கொண்டே போகும். அதன் விளைவாக அவர் தீய பண்புகள், தீய நடத்தைகளை விட்டும் விலகிச் செல்வதில், விட்டுவிடுவதில் முனைந்து நிற்பார், அதே சமயம் அவருடைய இபாதத்களும் அமல்களும் பொலிவு அடைந்து கொண்டே செல்லும்! இம்மையிலும், மறுமையிலும் இத்தகையவர் வெற்றி பெறாமல் இருப்பாரா? என்ன? ஆத்மீக ஞானிகளிடம் சென்று தஸ்கியா பாதையில் வாசகர்களை ஓர்அடி முன்னோக்கி செலுத்தியிருந்தாலும். அதுவே ஈருலகிலும் பெறும் வெற்றியாகும்.

இன்னும் சொல்வதானால் தஸ்கியதுன் நப்ஸ் செய்வதன் மூலம் நற்பண்புகளைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த நற்பண்புகளை உண்டாக்கி கொள்வதற்குத்தான் இறையச்சம் கொண்ட அல்லாஹ்வின் இறைநேசர்களாகிய வலிமார்கள் அல்லும் பகலும் நப்ஸை தூமைப்படுத்தி இறைவணக்கம் புரிந்தார்கள். இறையன்பு கொண்டவர்கள் மனப்பயிற்சியில் மூழ்கினார்கள். ஆம் மனப்பயிற்சியின் உதவியால் நற்குயங்களையும், உயர் பண்புகளையும் உண்டாக்கிக் கொள்ள முடியும் என்று அவர்கள் தங்கள் குறிக்கோளை அடைந்தார்கள் வெற்றி பெற்றார்கள்.

♦ இஸ்லாமிய தூய மார்க்கத்தில் அல்லாஹ்வும் அவனுடைய தூதர் எம்பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் சொல்லப்பட்டுள்ள எந்தவொரு வணக்கமானாலும், அவற்றையெல்லாம் ஷிர்க் (இணையாக்காமலும்) ரியா (முகஸ்துதி) யின்றி முழுக்க முழுக்க இறைவனின் திருப்தியை நாடியே மட்டும் செய்ய வேண்டும் அப்போது தான் அந்த காரியங்கள் அல்லாஹ்விடம் ஏற்கப்படும்.

♦ ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து கேட்டார். ஒரு மனிதர் அல்லாஹ்வின் பாதையில் நன்மையை நாடியும் தன்னைப் பற்றி நினைவு கூறப்படுவதையும் நாடியவராக போரில் கலந்து கொண்டால் அவருடைய நிலை என்ன? என்று வினவ அதற்கு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவருக்கு எதுவும் இல்லை என மூன்று முறை கூறிவிட்டு பின்பு சொன்னார்கள் நிச்சயமாக அல்லாஹ் அவனுடைய திருப்பொருத்தத்தை நாடி உளத்தூய்மையோடு செய்யப்படும் அமலைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்ளவதில்லை.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அபு உமாமா அல் பாஹிலி ரழியல்லாஹு அன்ஹு

​நூல்: நஸாயீ 3089

♦  நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அருளினார்கள்:

​நிச்சயமாக அல்லாஹ் உங்களின் உடல்களையோ தோற்றங்களையோ பார்ப்பதில்லை. ஆனால் உங்களின் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கிறான்'


​​நூல்: முஸ்லிம்

♦ (ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே! நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்)  (அல்குர்ஆன் : 89:27, 28,29,30)

♦ அல்லாஹ் எவருடைய இருதயத்தை இஸ்லாத்திற்காக விசாலமாக்குகிறானோ அவர் தமது இறைவனின் ஒளியில் இருக்கிறார். (ஆனால்) அல்லாஹ்வுடைய நினைவை விட்டும் விலகி எவர்களுடைய இருதயங்கள் கடினமாகிகடினமாகி விட்டனவோ அவர்களுக்குக் கேடுதான். இத்தகையோர் பகிரங்கமான வழி கேட்டில் இருக்கின்றனர்.  (அல்குர்ஆன் 39-22)

இஸ்லாமிய உள்ளங்களே! மனோ வியாதிகளையும் அவற்றை அகற்வதற்குரிய வழிகளையும், மனோ வியாதியின் போது வெளிப்படும் அடயாளங்கள் முதலியவற்றை மார்க்கம் படிதத் அனுபவமுள்ள ஆத்மீக ஞானிகளான காமிலான ஷெய்குமார்களை தேடிப்பிடிப்பது கட்டாயக் கடமையாகும்.


​​அந்த அடிப்படையில் மனிதன் இம்மையிலும் வெற்றி அடைய வேண்டும் மறுமையில் ஈடேற்றத்தைப் பெறவேண்டும் என்றால் அவன் தஸ்கியா பெற்றே தீரவேண்டும். யா அல்லாஹ்! காமிலான ஷெய்குமார்களிடம் பைஅத் செய்து அவர்கள் மூலம் எங்களது நப்ஸை தஸ்கியா தூமைப்படுத்துவாயாக! ஈருலகிலும் வெற்றிபெர அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

சூபிசம் சம்பந்தமான நூல்கள்


1. இஹ்யாவு உலூமூத்தீன்

2. பத்ஹுர் ரப்பானி     

3. மௌலானா ரூமியின் தத்துவங்கள்    

4. கல்வத்தின் இரகசியங்கள்

சூபிசம் என்றால் என்ன (SUFISM)


ஸுபிஸம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

தரீக்கா என்றால் என்ன (TARIQA)


இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.


​​​​​

தன்னை அறிதல்


​​தன்னை அறிவதற்கு முதல் படி என்ன? என்பதை அறிய இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய இந்த சிறு கட்டுரையை வாசியுங்கள்.